Saturday, December 26, 2009

கிழிக்காத தீக்குச்சி

உருப்பெற்ற சிசுக்களை
உருவி எடுத்ததும்
வயதுற்றச் சிறுமிகளை
புணர்ந்துக் கொன்றதும்
கருவுற்றச் சகோதரிகளை
குண்டுகள் துளைத்ததும்
ஏனோ நமக்கு
உறைக்கவில்லை.

எந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி..

தூ...

எந்தையும் தாயும்
இனத்தை தொலைத்ததும்
எந்தையும் தாயும்
உறவை இழந்ததும்
எந்தையும் தாயும்
உதிரம் வடித்ததும்
எந்தையும் தாயும்
ஊனம் கொண்டதும்

இறுதியாய்
எந்தையும் தாயும்
துடித்து மடிந்ததும்
எந்தையும் தாயும்
கத்திச் செத்ததும்
எந்தையும் தாயும்
மரணித்து மண்ணானதும்

இந்நாடே! இந்நாடே!! இந்நாடே!!!

இங்கு
முதிர்ந்த பெற்றோர்
முதியோர் இல்லம்
கொண்டாலே
குற்றமெனக் கொதிக்கிறோம்.
அங்கு
பிஞ்சு சிசுக்களை
மசக்கையின் போதே
மயானம் அனுப்பினோமே.

இங்கு
பள்ளிக் குழந்தை
பத்து நிமிடம்
தாமதமெனில்
அழுதுத் தொலைக்கிறோம்
அங்கு
பள்ளிக் குழந்தைகள்
அத்தனை மீதும்
தோட்டாக்கள் பாய்ந்ததே
என்ன செய்தோம்?

உதிரம் பரவிய
உடம்பொடு நின்ற
உடன்பிறந்தவனுக்காக
என்ன செய்தோம்?
கிழிந்த மார்போடு
கதறித் துடித்த
பெண்ணைப் பார்த்து
என்ன செய்தோம்?
மருத்துவமனையில்
குண்டுகள் யாவும்
மொத்தமாய் விழுந்தும்
நமக்கு செவிகள் ஏனோ
மந்தமாய்க் கேட்டது
இல்லை இல்லை
செத்தே விட்டது.

எரியும் தீயில்
விரலை விட்டால்
இழுத்துக் கொள்ளும்
அனிச்சை செயல்
தமிழா!
உன் இனமே
எரியும் போதும் நீ
அமைதியாய் இருந்தாய்
எப்படி சொல்?

போராட்டம் நடத்தினோம்
பேரணி நடந்தோம்
மனிதசங்கிலிக் கூட்டினோம்
உண்ணாவிரதம் இருந்தோம்
ஆறு கோடி பேரால்
ஆறு தமிழனையாவது
மீட்க முடிந்ததா?

ஏய் வெறியனே!

அதெப்படி
உன் குண்டுகள்
காட்டில் விழுந்தாலும்
தாவரத்தை விடுத்து
தமிழனைக் கொன்றது
மிருகத்தை விடுத்து
மனிதனைக் கொன்றது?

உன்னிடம் புகைக்கவா
அனுமதிக் கேட்டோம்
சுவாசிக்கத்தானே?

முலைகளை அறுத்து
வியாபாரம் செய்தது
உலக வரலாற்றில்
இதுவரை இல்லை.
முதியோர்
மழலை பெண்களென
எல்லோர் மீதும்
குண்டுகள் பொழிந்தாய்
அதில் மட்டும் நீ
சமத்துவம் காத்தாய்.

தமிழன் என்ற
ஒரு சொல் மட்டும்
தவறாய் உனக்கு
படுவதுமேன்?
தமிழனாய் பிறந்தது
ஒன்றை விடுத்து
வேறேது செய்தான்
என் தமிழன்.

கவிதை எழுதும்
இக்கணமே எனக்கு
தாரை தாரையாய்
கண்ணீர்.
கவிதையெழுதவே
வலிக்கிறதெனக்கு
ஓ சிசுவே!
குண்டுகள் எப்படி
சுமந்தாய் கண்ணே?

அங்கு
அரசியலால் உயிர்கள்
இல்லை.
இங்கு
அரசியலில் உயிர்ப்பு
இல்லை.

இங்கு மட்டும்தான்
முழு அர்த்தம் பெறுகிறது
இறந்த காலம்
என் இனம்
இறந்த காலமென.

ஏய் அரசே!
குண்டுகள் குதறிய
குரூர முகத்தை
கண்டும் உனக்கு
கருணை வராதப்
பிண்ணனி என்ன?
ரத்தம் பீறிடும்
கொடூர காட்சியை
சத்தம் போடாமல்
சலிப்பாய் பார்த்தாய்.

எங்கள் கண்ணீரின்
வெம்மை
உன் தலைமுறையை
தூக்கிலிடும்.

அவர்கள் உதட்டில்
புன்னகை துளிர்க்க
குறைந்த பட்சம்
பத்தாண்டாகலாம்.
மரண நெடியை
இழுத்தாவது
வாழட்டும் இனி
அவர்களை விட்டுவிடு.

இதே நிலைதான்
தொடருமாயின்
மொத்தமாய் எங்களையும்
சாகவிடு.

ஒரு கொலை
செய்தவனுக்கு
பதினான்கு ஆண்டு சிறை
ஒரு இனத்தைக்
கொன்றவனுக்கு
ஐந்து ஆண்டு ஆட்சியா?

என் இனத்தை
கொன்று குவித்தவன்
ஆறாம் அறிவை
அடகு வைத்தவன்.

தமிழா!!

உன் குரலை
உலகமே கேட்டது.
ஒருவன் மட்டும்
கேட்கவில்லை.

அடிமையாய் இருப்பதே
அடிப்படை தகுதியானதே.
செத்துத் தொலைப்பதே
தமிழனின் சொத்தானதே.
இது என் கண்ணின்
கோளாறா?
இல்லை
இது தான்
நம் வரலாறா?

இத்தனை எழுதினாய்
நீ என் செய்தாய்?
என்போர் முகத்தில்
எச்சிலை உமிழ்வேன்.

ஆண்மையிழந்த
அரசாங்கத்தை
அமைத்தது நீ.

கொசுக் கடித்தால்
அடித்து நசுக்குவாயா?
மந்திரியிடம் மனு
கொடுப்பாயா?

நான் நிற்கிறேன்
தீக்குச்சியோடு*.
எத்தனைப் பேர்
என்னுடன்.?



No comments:

Post a Comment